Main Menu

புதிய ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமருடன் சம்பந்தனின் சந்திப்பு

நாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுவாரஷ்யமாக கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்துகொண்டிருந்ததன் பின்னர் இடம்பெற்ற விருந்து உபசாரத்தின் போதே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடனும் சம்பந்தன் கலந்துரையாடினார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் அருகில் இருந்தார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவருடன் கைகொடுத்து உரையாடினார்.

இதன்பின்னர், இவர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பலரும் ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

அத்துடன் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் இராஜதந்திர அதிகாரிகள் எனப் பலரும் இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கைலாகு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

பகிரவும்...