Main Menu

புடினிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் ஜனாதிபதி தெரிவிப்பு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸின் நீண்டகால ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டங்கள் நடத்திவருகின்றமைக்கு மத்தியில் முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 15ஆம் திகதி லுகாஷென்கோ, சோச்சி நகரில் உள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தனி குடியிருப்பு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நான்கு மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது பொலாரஸில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், பொருளாதார பிரச்சனைகள் தொடர்பாகவும் ரஷ்யா உதவவேண்டும் எனவும் ஜனாதிபதி புதினிடம் லுகாஷென்கோ, வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, பெலாரஸின் பொருளாதார பிரச்சனைகளை மீளகட்டமைக்க உடனடியாக 1.5 பில்லியன் டொலர்கள் கடனுதவி வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் உறுதியளித்தார். ஆனால், இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு தொடர்பாகவும் ஆயுதங்கள் தொடர்பாகவும் ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டனவா? என்ற தகவல் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினிடம் ஆயுத உதவி கேட்டதாக ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாம் பெலாரஸ் நாட்டிற்குள் மட்டுமல்லாமல் எல்லைப்பகுதியிலும் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினிடம் சில புது வகையான ஆயுதங்களை கேட்டுள்ளேன்.

ரஷ்யாவும், பெலாரசும் இணைந்து இராணுவ ஒத்திகைகளை மேற்கொண்டு வருகிறது. இது போன்ற இராணுவ ஒத்திகைகளை இரு நாடுகளும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினிடம் எந்த வகையான ஆயுதங்களை உதவியாக கேட்டுள்ளார் என்ற தகவலை பெலாரஸ் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.

பகிரவும்...