Main Menu

பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை மீது துப்பாக்கி சூடு ; இராணுவ வீரர் கைது

காலி – அக்மீமன பகுதியில் இராணுவ சிப்பாயின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தமையையடுத்து குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்மிமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானவில பகுதியிலுள்ள  பாடசாலையொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இன்று  வியாழக்கிழமை இராணுவ சிப்பாயினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்மிமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காலி – பிலான பகுதியைச் சேர்ந்த  39 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் மூன்று பிள்ளைகள் குறித்த பாடசாலையில் கல்வி கற்று வருகின்ற நிலையில் இன்று  முற்பகல் குறித்த நபரின் ஒரு பிள்ளை சுகயீனமடைந்துள்ளதாக பாடசாலையிலிருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி தகவலுக்கமைய அவர் பாடசாலைக்கு சென்று சுகயீனமடைந்த தனது பிள்ளையை அழைத்துச் சென்றுள்ளார்.

மீண்டும் தனது மற்றைய இரு பிள்ளைகளையும் அழைத்துச் செல்வதற்காக பிற்பகல் 12.05 மணியளவில் பாடசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது பாடசாலையின் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் இருவருக்கும் குறித்த நபருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இராணுவ சிப்பாய் ஒருவர் இவரை பாடசாலைக்குள் செல்லவிடாமல் தடுத்துள்ளார். இதன்போது இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை உயிரிழந்த நபர் பரிக்க முற்பட்டதாகவும் , பின் இராணுவ சிப்பாய் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து படுகாயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். 

சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில். சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளதோடு அக்மிமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...