Main Menu

பிலிப்பைன்ஸில் கோனி புயலின் தாக்கம் குறைவதற்குள் மற்றொரு புயல் தாக்குமென எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் பேரழிவை ஏற்படுத்திய கோனி புயலின் தாக்கம் குறையும் முன்னரே மற்றொரு புயல் நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிக்கோ தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த புயலாகக் கருதப்படும் கோனி புயல் தாக்கத்தால் மக்கள் மீண்டெழ முடியாத நிலையில் அட்சானி என்ற மற்றொரு புயல் பிலிப்பைன்ஸை நெருங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் பசுபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் இந்தப் புயல், இந்த வார இறுதியில் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசன் தீவு மாகாணத்தின் பிகோல் பிராந்தியத்தில் உள்ள கேடான்டுவானஸ் மற்றும் அல்பேவில் கோனி சூறாவளி தாக்கியது.

இந்த சூறாவளியால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதோடு, 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் சூறாவளியின் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அல்பே மாகாணத்தில் உள்ள மயோன் எரிமலையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 இலட்சத்து 90 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 இலட்சத்து 45 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பிலிப்பைன்ஸை தாக்கிய மொலேவ் சூறாவளியால் 23 பேர் உயிர்ழந்ததோது, 39 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...