Main Menu

பிரான்சில் இரவு நடந்த கோர விபத்தில் 5 குழந்தைகள் பலி

மகிழுந்து ஒன்றில் வீடு நோக்கிப் பயணித்த பிரான்சின் (Lyon) Vénissieux நகரைச் சேர்ந்த குடும்பமொன்று தெற்கு-வடக்கு திசையில், A7 மோட்டார் பாதையில் விபத்தில் சிக்கியதில் அக்குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி மூன்று பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

Albon (Drôme) பகுதியில் நேற்று (20/07/2020) திங்களன்று இரவு 6.55  மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனத்தில் ஆறு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பயணித்துள்ளனர்.
இதில் 3 முதல் 13 வயதுடைய ஐந்து குழந்தைகள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஞ்சிய நான்கு பேரும் எரியும் வாகனத்திலிருந்து தப்பிக்க முடிந்ததாக கூறப்படுகிறது.

ஒரு (7வயது) குழந்தை உட்பட உயிர் தப்பிய நால்வரும் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் முழுமையான அவசர நிலையில் உள்ளனர் எனவும் தகவல் வெளியானது.

தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை (21/07/2020) 12.45 மணியளவில் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gérald Darmanin மற்றும் போக்குவரத்து அமைச்சர் Jean-Baptiste Djebbari விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

53 Drôme தீயணைப்பு வீரர்கள், மூன்று ஹெலிகாப்டர்கள் (Drômeல் உள்ள SAMU, Rhôneல் உள்ள SAMU மற்றும் சிவில் பாதுகாப்பு) விரைவாக தலையிட்டு, தீவிரமாக காயமடைந்த நால்வரையும் லியோனில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்தின் சூழ்நிலைகள் குறித்த விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், முதல் சாட்சியங்களின் கூற்றுப்படி, வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையை விட்டு வெளியேறி வயல்வெளிக்குள் சென்றதாகவும், பின்னர் தீக்கிரையாகியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

பகிரவும்...