Main Menu

பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு பிஸ்கட் கொடுத்து இராணுவம் சுட்டுக் கொன்றது என குற்றம்சாட்டினார்.

இவ்விடயத்தை மறுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, “பிரபாகரனின் மனைவி விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அவரது மூத்த மகன் விடுதலைப் புலிகளின் கேணல் தர அதிகாரி.  அவரது மகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவில் உறுப்பினராக இருந்தார். அவரது இளைய மகன் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தை படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

2009 இல் ஊடகங்களில் பரப்பப்பட்ட படத்தில் பிரபாகரனின் இளைய மகன் சாரம் அணிந்தபடி காணப்பட்டார். அவருக்கு அருகில் சீருடையுடன் சிலர் இருந்தார்கள்.

அந்த சீருடையைக் கவனித்தால், இந்திய படையின் காட்டு நடவடிக்கை படையணியின் உடையை போலிருப்பது தெரியும். செல்வராசா கஜேந்திரன் தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை தவிர்க்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...