Main Menu

பிடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்தால் வெளியேறுவேன்: ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்து அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், ஜோ பிடனின் வெற்றியை அவர்கள் அங்கீகரித்தால், பெரிய தவறு செய்தவர்களாக ஆவார்கள். இந்தத் தேர்தலில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது என்று ட்ரம்ப் மேலும், கூறினார்.

கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி உறுதியாகியுள்ள நிலையிலும், தற்போதைய ஜனாதிபதியும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் அதனை ஏற்கவில்லை. தேர்தலில் தனது தோல்வியை முறைப்படி ஏற்க அவர் மறுத்து வருகிறார்.

தேர்தலில், மொத்தமுள்ள 538 மக்கள் பிரநிதிதி வாக்குகளில், ஜோ பிடனுக்கு 306 வாக்குகளும், ட்ரம்ப்புக்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதையடுத்து, அந்நாட்டு வழக்கப்படி வரும் டிசம்பர் 14ஆம் திகதி மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் கூடி ஜோ பிடனின் வெற்றியை உறுதி செய்து அறிவிக்க உள்ளனர். புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா ஜனவரி 20ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

இதற்கிடையில் அதிகார மாற்றத்துக்கு அனுமதி மறுத்து வந்த ட்ரம்ப், பின்னர் மனம் மாறி இரண்டு நாட்களுக்கு முன் அதிகார மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் தற்போது மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்து அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவேன் என கூறியுள்ளார்.

பகிரவும்...