Main Menu

பாலியல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தா கைது

பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது.

புகார் அளித்த மாணவியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம்  விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து  சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் இன்று ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்தாவின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்மயானந்தா கைது செய்யப்பட்டதையொட்டி  அவரது வீடு மற்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற நோயாளிகள் கடுமையான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். 

பகிரவும்...