Main Menu

பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு புயல் வேகத்தில் பணியாற்றுங்கள்- செயற்குழுவில் கமல்ஹாசன் பேச்சு

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களத்தில் உள்ளன. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அப்படியே கூட்டணியில் நீடிக்குமா? இல்லை இடம் மாறி தேர்தலை சந்திக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. புதிய கட்சிகளும் கூட்டணியில் சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய கமல்ஹாசன், கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து விதமான தோல்விகளையும் சந்தித்து விட்டார். 2019-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல், 2021-ல் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தல்களிலும் களம் கண்டுள்ளது. ஆனால் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நெருக்கடி அந்த கட்சிக்கும், கமல்ஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த மாதம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்த கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், அப்போதுதான் கட்சியை வலுப்படுத்தி வெற்றி பெற முடியும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் பேசியிருப்பதாவது:- வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நீங்கள் அனைவரும் இப்போதில் இருந்தே தீவிரமாக பணியாற்ற வேண்டும். கிராமப் புறங்கள் தொடங்கி நகர பகுதிகள் வரையில் அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். அதில் நிர்வாகிகளை நியமித்து மக்கள் மத்தியில் கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற நான் உள்பட அனைவருமே புயல் வேகத்தில் பணியாற்றிட வேண்டும். மக்கள் மத்தியில் எனக்குள்ள செல்வாக்கு என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனை கட்சியின் செல்வாக்காக உயர்த்தும் வகையில் உங்கள் பணிகள் அமைய வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைக்குமா? என்பதை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதனை தான் பார்த்துக் கொள்வேன். நமது கட்சியின் அடித்தளத்தை வலுவாக்கினால்தான் நம்மால் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். கட்சி வலுவாக இருந்தால் தானே கூட்டணி உள்ளிட்ட விஷயங்களில் நம்மால் கவனம் செலுத்த முடியும். இதனை உணர்ந்து நீங்கள் பணியாற்ற வேண்டும். அடுத்த 1½ ஆண்டுகள் கடினமாக உழைத்தால் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை உணர வேண்டும். கட்சி வளர்ச்சியில் கூடுதல் வேகம் தேவை. தீவிர தொண்டர்களாக நீங்கள் பணியாற்ற வேண்டும். கட்சியை வளர்ப்பதற்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு செயல்பட நானும் தயாராகவே உள்ளேன். நீங்கள் அழைக்கும் இடத்துக்கு எப்போதும் நான் வருவேன். சினிமா என்பது வருவாய்க்கானது. அரசியல் என்பது மக்களுக்கானது. எனவே கட்சியை நீங்கள் தான் வளர்த்து கொடுக்க வேண்டும். இதன்மூலமே எதிர்காலத்தில் நாம் வெற்றியை ருசிக்க முடியும். இவ்வாறு கமல்ஹாசன் செயற்குழு கூட்டத்தில் பரபரப்பான பேச்சை வெளிப்படுத்தியுள்ளார். இதைதொடர்ந்து மக்கள் நீதி மய்யம் செயற்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு வசதியாக 39 பாராளுமன்ற தொகுதியிலும் பொறுப்பாளர்களை நியமிப்பது, தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைப்பது, கமல்ஹாசனின் சுற்றுப்பயணத்தை திட்டமிடுவது, பொதுக்கூட்டங்களை எங்கெங்கு நடத்துவது என்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்படி கட்சியை வலுப்படுத்த கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

பகிரவும்...