Main Menu

பாக்தாதியின் சகோதரி கைது- துருக்கி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாக்தாதியின் சகோதரி ராஸ்மியாமாஸ்கோ:
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. 
சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பாக்தாதி, பதுங்கி இருப்பதை துப்பு அறிந்து கடந்த மாதம் 26-ந் தேதி அமெரிக்க சிறப்பு படை சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பாக்தாதி பலியானதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பாக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா (வயது 65), அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை துருக்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணம் அஜாஸ் நகரில் கணவர் மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்த ராஸ்மியாவை நேற்று மாலை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ராஸ்மியா தொடர்பில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரை கைது செய்து விசாரணை நடத்துவதன் மூலம், உளவுத்துறைக்கு முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...