Main Menu

பரோலில் வந்துள்ள பேரறிவாளனை யாரும் சந்திக்க வரவேண்டாம்- போலீசார் தகவல்

பேரறிவாளன் பாதுகாப்பு கருதி அவரது வீட்டிலேயே தினமும் கையெழுத்து வாங்கப்படும் என போலீசார் கூறினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று காலை சென்னை புழல் ஜெயிலில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.

அவரது தாய் அற்புதம்மாள் வரவேற்றார். முன்னதாக பேரறிவாளனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு தோற்று இல்லை என உறுதி செய்த பின்னரே அவரை அழைத்து வந்தனர்.

ஒரு மாதம் பரோலில் வந்த பேரறிவாளன் கொரோனா தொற்று காரணமாக தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம். வீட்டில் தான் அற்புதம்மாள் உடன் இருப்பதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் டி.எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 6 எஸ்.ஐ.க்கள் என 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரறிவாளன் வீட்டுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பேரறிவாளன் பரோல் காலம் முடியும் வரை வீட்டில் இருந்து தினமும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும்.

ஆனால் பேரறிவாளன் பாதுகாப்பு கருதி அவரது வீட்டிலேயே தினமும் கையெழுத்து வாங்கப்படும் என போலீசார்  கூறினர்.

இதற்கு முன்பு பேரறிவாளன் 2017, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் பரோலில் வந்தார்.

தற்போது அவர் 4-வது முறையாக பரோலில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...