Main Menu

பரமக்குடி அருகே கிராம மக்கள் ஓட்டுபோடாமல் தேர்தல் புறக்கணிப்பு

பரமக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராம மக்கள் ஓட்டுப்போட ஓட்டுச் சாவடிக்கு வராததால் பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கமுதக்குடி வழியாக மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே பாதை அமைந்துள்ளது. இங்கு 50 ஆண்டுகளுக்கு மேல் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த ரெயில்வே கேட்டை கமுதக்குடி, இலந்தைகுளம், பியனேந்தல், ஆதியனேந்தல், சுந்தனேந்தல் உள்ளிட்ட 6 கிராமங்களில் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டவுடன் பாலம் அமைக்கப் பட்டவுடன், எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், ரெயில்வே நிர்வாகத்தின் மூலம் கேட் மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் ரெயில்வே நிர்வாகம் உள்ளது. இதனால் கமுதக்குடி உள்ளிட்ட 6 கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இறந்தவர்கள் உடல்களை கொண்டு செல்வதற்கும், பேருந்து நிறுத்தம் செல்வதற்கும் 6 கிலோமீட்டர் தூரம் சென்று பாலத்தை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

நீதிமன்ற வழிகாட்டு தலின்படி சப்வே அமைக்கும் வரை தற்காலிகமாக ரெயில்வே கேட்டை திறக்க வேண்டும். இல்லையெனில், தேர்தலை புறக்கணிப்போம் என 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று பரமக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராம மக்கள் ஓட்டுப்போட ஓட்டுச் சாவடிக்கு வராததால் பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. கிராம மக்களை சமாதானப்படுத்தி ஓட்டு போட வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பரமக்குடி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செல்வி போராட்டம் நடந்து வரும் கமுதக்குடியைச் சேர்ந்தவர். இவர் மட்டும் இன்று காலை வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.

பகிரவும்...