Main Menu

நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள்

மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடை பெற்றுவருகின்றன.

அகில இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் இன்று அமைச்சர் தொண்டமானுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன் அவரின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என 500 பேர் வரையில் மைதானத்தில் குழுமியுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை சன்று முன்னர் நோர்வூட் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டிருந்தது.

இந்த இறுதிக்கிரியைகளுக்காக நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் பரவல் மற்றும் பாதுகாப்பு ஆகியன கருத்திற்கொண்டு சுகாதாரப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மைதானத்தின் உள்ளே செல்லும் ஒவ்வொருவரும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடல்வெப்பம் அளவிடும் கருவியின் மூலம் உடல்வெப்பம் அளவிடப்பட்ட பின்னரே மைதானத்தினுல் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறுதிக்கிரியைகளில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நபரும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸார் மற்றும் சுகாதாரப்பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் வாகனங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பாதுகாப்பு பிரிவினர் தடைசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...