Main Menu

நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் – மாவை சேனாதிராஜா

எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘போராட்டத்திற்கான கட்டமைப்பை ஒருமைப்பாட்டோடு உருவாக்குவோம் என்பதை அறுதியிட்டுக் கூறிக்கொள்கின்றேன்.

இதன் பொருட்டு ‘தேசிய சபை’ உருவாக்குவதற்கு முன்னின்று உழைப்பேன் என உறுதியளிக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநாடு ஒன்றும் இந்த ஆண்டில் நடத்த வேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன்.

வன்னி மண்ணிலே சென்ற மாதங்கள் வரையிலும் காணாமற் போனோரைத் தேடி கண்ணீர் விட்டுக் கதறி அழும் தாய்க்குலத்தின் துயரத்தைக் கேட்டோம்.

என் கணவன் எங்கே? என் மனைவி எங்கே? என் பிள்ளை எங்கே? என்று வானுலகம் வரை கேட்க குரல் எழுப்புகிறார்கள். நீதி எங்கே கிடைக்கப் போகிறது என்ற ஏக்கமும், ஆதங்கமும் நெஞ்சைப் பிளக்கிறது.

இந்த மாநாட்டிலிருந்து எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அல்லது ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதென்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தீர்மானிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அனைத்து சக்திகளையும் அணிதிரட்டி ஜனநாயக வழியில் போராட்டங்களை நடாத்தவேண்டுமென்ற பொறுப்பை வரலாற்றுக் கடமையை நான் தெரிவு செய்து கொண்டிருக்கின்றேன்.

பாரதப்போரிலே யுத்த காலத்திலே பார்த்தசாரதியாக நின்ற பரமாத்மா கிருஸ்ணன் அர்ச்சுனனிடம் போதித்ததென்வென்றால் ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ என்பது தான்.

அதுதான் பகவத்கீதையின் அடிநாதம். எம் கடன் பணி செய்வது, ஆனால் அது தமிழினத்தின் விடுதலைக்காக பயனுற வேண்டும் என்பது தான் எம் இதய வேட்கை’ என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...