Main Menu

த.தே.கூட்டமைப்பு – ஐ.தே.கட்சி சந்திப்பு நாளை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இறுதித் தீர்மானத்தினை எடுத்திருக்காத நிலையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.

முன்னதாக சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு தயாரென்று தானாக முன்வந்திருந்த அறிவித்திருந்த வேளையில் அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.

அதனையடுத்து யாழில் நடைபெற்ற என்டர்பிரைரஸ் சிறிலங்கா கண்காட்சியின் நிறைவுநாள் நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த சஜித் பிரேமதாச இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்த வேளையில் ஐ.தே.கவின் சார்பில் வேட்பாளர் தொடர்பிலான இறுதி முடிவு எடுக்கப்பட்டிருக்காத நிலையில் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த முடியாதென்று கூறியிருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது ஐ.தே.க தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில் ஐ.தே.கவுக்கும் கூட்டமைப்புக்கும் நடைபெறும் முதலாவது உத்தியோக பூர்வமான சந்திப்பாக இது அமையவுள்ளது.

இச்சந்திப்பின்போது ஐ.தே.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் கோரப்படலாம் என்று அதன் உயர்மட்டத்தகவல்கள் தெரிவித்ததோடு, கூட்டமைப்பின் சார்பிலும் தமது இறுக்கமான நிலைப்பாடுகள் பிரஸ்தாபிக்கபடும் என்றும் அதன் முக்கிஸ்தர்களிடமிருந்து அறிய முடிகின்றது.

பகிரவும்...