Main Menu

தேர்தல் முடிவு, சத்தியப் பிரமாணம், அடுத்த கட்டங்கள் குறித்து மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் மிக துரிதகரமான முறையில் வெளியிடப்பட்டு நாளை மாலை  ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தேசித்துள்ளோம். 

அவ்வாறு இயலாவிடின்  ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று ஜனாதிபதி நாளைமறு தினமே சத்தியபிரமாணம் செய்துக் கொள்ளலாம்  என தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நாடு தழுவிய ரீதியில்  வாக்குப்பதிவுகள் 82சதவீதமாக காணப்படுவதுடன். அம்பாந்தோட்டையில் 85சதவீதமும், மன்னாரில் 62 சதவீதமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தேர்தலை சுயாதீனமாகவும், ஜனநாயகமாகவும் நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், மற்றும்  எதிர்க்கட்சி தலைவர் , அரசியல் கட்சியின் தலைவர்கள், பாதுகாப்பு  தரப்பினர், அரச ஊழியர்கள் உட்பட  நாட்டு மக்கள் அனைவருக்கும்  ஆணைக்குழுவின் சார்பில்  நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல்  வெற்றிகரமான முறையில் நிறைவுபெற்றுள்ளது. இருப்பினும் இதில் திருப்தி கொள்ள முடியாது. ஆரம்பத்தில் இருந்து ஏற்பட்ட இடையூறுகளை  உரிய தரப்பினர் தவிர்த்துக் கொண்டிருந்தால்  தேர்தலை இதனை காட்டிலும் சிறந்த முறையில்  நடத்தியிருக்கலாம். இருப்பினும் இத்தேர்தல் சுயாதீனமான முறையிலும்,  நியாயமான முறையிலும் நடத்துவதற்கான சூழலை  ஏற்படுத்திக் கொடுத்தமையினையிட்டு பெருமை கொள்ளலாம்.

தேர்தலின் முடிவுகளை  மிகவும் துரிதகரமாகவும், நியாயமான முறையிலும் உடனுக்குடன்  வெளியிடுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. நாளை மாலை  யார் ஜனாதிபதி என்று அறிவிக்கப்பட்டு அவர்  பதவி பிரமாணம் செய்யும் சூழலை  ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கின்றோம். எமது  வியூகம்  சரியாகாவிடின்  நாளை மறுதினம் ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று  ஜனாதிபதி  பதவி பிரமாணம் செய்துக் கொள்ளலாம்.  ஜனாதிபதியாக பெயர் குறிப்பிடப்படுபவர்  இரண்டு வார காலத்திற்குள்  பதவி பிரமாணத்தினை செய்துக் கொள்ள முடியும்.

தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட வேளையில் இருந்து தேர்தல் ஆணைக்குழு தவிர்க்க வேண்டிய பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை அரசியல் தேவைகளுக்காகவும், தனி நபர் தேவைகளுக்காகவும் இடம் பெற்றுள்ளது. இதுவரையில் 4769 முறைப்பாடுகளும், 42வன்முறை சம்பவங்கள், 4610 தேர்தல் சட்ட விதிவிதிமுறை மீறள்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறான முறைப்பாடுகளுக்கு உரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற இன்றைய தினம் மிக பாரதூரமான  சம்பவங்கள் ஏதும் இடம் பெறவில்லை.   7 பிரதேசங்களில் வன்முறை  சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெரணியகல, புத்தளம், வெலிமட, யட்டியாந்தோட்டை உள்ளிட்ட பிரதேசங்களில்  சில வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.  தெரணியாகல பகுதியில் இடம் பெற்ற சம்பவம் அரசியல் தேவையினை கருத்திற் கொண்டதாக காணப்படுகின்றது.

புத்தளம் – மன்னார்  பிரதேசத்தில்  பேருந்தினை நோக்கிய துப்பாக்கி சூட்டில் எவருக்கும் எவ்வித  பாதிப்பும் இடம் பெறவில்லை. யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் மீள்குடியமர்த்தப்பட்ட   மக்களின் வாக்குரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்களை இனிவரும் காலங்களில் எடுக்க வேண்டும்.

வினைத்திறனான தேர்தல்

சுயாதீனமான முறையிலே தேர்தல் இடம் பெற்றுள்ளது என்பதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இருப்பினும் ஒரு சில குறைப்பாடுகள் பல்வேறு  தரப்பிலும் காணப்படுகின்றது. வினைத்திறனான தேர்தலை  நடத்தமுடியவில்லை என்று குறிப்பிடுவது எனது தனிப்பட்ட  கருத்தாக அமையும்.

இரு அரச மற்றும் தனியார் ஊடங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கும் அப்பாற்சென்று தான்தோன்றித்தனமான முறையில் செயற்ப்பட்டமை  பாரிய   சிக்கலாக காணப்பட்டது. இவை அவர்களின் அரசியல் தேவைகளை  கருத்திற்  கொண்டதாக காணப்படலாம். இருப்பினும் அது சுயாதீன தேர்தல் முறைமைக்கு ஒரு வழியில் இடையூறை ஏற்படுத்தியது.

 சில தரப்பினர்  தேர்தல் ஆணைக்குழுவிற்கு இணக்கமாக செயற்படுவதாக காண்பித்துக் கொண்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகளை காட்டிக் கொடுத்துள்ளார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்கு 14,15 ஆம் திகதிகளில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஊடங்களில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக   பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் தொடர்பில்  வடக்கு மாகாண முன்னாள்  மாகாண சபை உறுப்பினர்  சிவாஜிலிங்கம் தமிழ் மொழியில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற வேண்டும்   என்ற  கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.  அவரது கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கான காலஅவகாசம் கிடைக்கப் பெறவில்லை. இனி வரும் காலங்களில் அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.  ஆணைக்குழுவின் அறிவுறுத்தலினை ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய அவருக்கு  ஆணைக்குழுவின் சார்பிலும், தனிப்பட்ட ரீதியிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

வாக்கெண்ணும் நடவடிக்கைகள்

சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை கொண்டு  வாக்கெண்ணும் செயற்பாடுகளில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் பலத்த பாதுகாப்பின் மத்தியிலே   வாக்குகள் எண்ணப்படுகின்றது. முப்படையினரும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் இருந்து  தேர்தல் நிறைவுப் பெற்றவரை  எவ்விதமான முறைக்கேடுகளுக்கும் இடமளிக்கவில்லை, மறுபுறம் இடம் பெற்ற முறைக்கேடுகளுக்கும் அக்கணமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை  ஜனாதிபதி  யார் என்று குறிப்பிட்டு அவர்  பதவி பிரமாணம் செய்து கொள்வதற்காக துரிதகரமாக செயற்படுவோம். அவ்வாறு முடியாவிடின்  நாளை மறுதினம்  நிச்சயம்  ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்துகொள்வார்.  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்  சுப வேளையில் தான்  சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளலாம் என்று கருதினால் அவர்  இரண்டு வார  காலவகாசத்தினையும் எடுத்துக் கொள்ள முடியும் என்றார்.

பகிரவும்...