Main Menu

துபாய் விமான நிலையத்தில் தவித்த கர்ப்பிணி… பிரசவம் பார்த்து காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்

துபாய் விமான நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு, அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றினார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன் உசைன் முகமது, சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், தனக்கு வயிறு மிகவும் வலிப்பதாக கூறி உதவி கேட்டுள்ளார். 

உடனே, இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் 6 மாதம் 5 நாட்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். அவரது ஆடையில் ரத்தம் சிந்தியிருந்ததைப் பார்த்து பதறிப்போன இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன், உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். 

அத்துடன், அங்குள்ள பரிசோதனை அறைக்கு அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்று தரையில் படுக்க வைத்து அவருக்கு முதலுதவி செய்தார்.  அப்போது அவருக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. கர்ப்பப் பையில் இருந்து குழந்தை வெளியேற ஆரம்பித்தது. 

இனியும் தாமதித்தால் தாயின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கார்பரல் ஹனன், பிரசவம் பார்த்துள்ளார். தலை திரும்பிய நிலையில், கர்ப்பப் பையை விட்டு வெளியே வராமல் இருந்த குழந்தையை லாவகமாக வெளியே எடுத்துள்ளார்.  பின்னர்  மருத்துவர்கள் வந்து தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதுபற்றி கார்பரல் ஹனன் கூறுகையில், “6 மாதத்திலேயே பிறந்த அந்த ஆண் குழந்தையை, கர்ப்பப் பையை விட்டு வெளியே எடுத்ததும் அழவில்லை, மூச்சும் விடவில்லை. ஏதோ பிரச்சனை இருப்பதை அறிந்த நான், உடனடியாக குழந்தையை காப்பாற்றுவதற்காக அவசர முதலுதவியை செய்தேன். 

முதலில் குழந்தையின் முதுகில் தட்டினேன், அப்போதும் அழவில்லை. பின்னர் குழந்தையின் மார்புக்கு சற்று அழுத்தம் கொடுத்து இதயத்துடிப்பை ஏற்படுத்த முயற்சி செய்தேன். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை அழத் தொடங்கியது. என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தையின் இனிமையான குரலைக் கேட்ட பிறகுதான் நிம்மதி ஏற்பட்டது” என்றார்.

சரியான நேரத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு, தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டரின் உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது செயலைப் பாராட்டி துபாய் காவல்துறை சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.

பகிரவும்...