Main Menu

திரை மறைவிலிருந்து இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களுக்கு வேதனையே – கோவிந்தன்

பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களை வேதனைக்கு உட்படுத்தும் விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

எனவே, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில், அவரது அவலுகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமோக வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்துள்ளன.

இந்நிலையில், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மீசையில் மண் ஒட்டவில்லையென்ற வகையில் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றார். 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் ஏனைய நாடுகள் எதிராகவுள்ளதாக காட்ட முற்படுகின்றனர்.

இலங்கை அரசாங்கமும் அவர்களின் அமைச்சர்களும் யாதார்த்ததினை புரிந்துகொள்ளாத நிலையிலேயே செயற்பட்டு வருகின்றனர்.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் பல நாடுகளைத் திரை மறைவிலிருந்து இந்தியா இயக்கியது. இந்தப் பிரேரணை வெற்றிபெற வேண்டும், இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், அவர்களுக்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறிய இந்தியா இந்தப் பிரேரணையில் நடுநிலை வகித்தது ஈழத் தமிழர்களை வேதனைக்கு உள்ளாக்கிய விடயமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகிய காலம் தொடக்கம் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகளைக் கடுமையாக இனவாத ரீதியில் விமர்சனம் செய்துவந்தனர்.

ஆனால், இறுதி நேரத்தில் இவர்கள் வாய்கள் அடைக்கப்பட்டு மௌனிகளாக்கப்பட்டார்கள். இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குபற்றியவர்கள் இங்குள்ள அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறியதாகவும் அறிகின்றோம்.

அந்தப் பிரேரணையின் கனதியை, அதனை ஆதரிக்கும் நாடுகளின் கனதியை, அடக்கிவாசிக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் துரதிர்ஸ்டவசமான சம்பவங்களை நிறுத்துவதற்காக குறித்த வேசங்களைக் கக்கிய அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறப்பட்டதும் அவர்கள் அடக்கிவாசித்ததும் எமக்கு சாதகமானதாகவே இருந்தது.

இன்றுகூட வெளியிறவுதுறை அமைச்சர் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் 13ஆவது திருத்தம் தொடர்பாகவும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகவும் பேசுகின்றார் என்றால் ஐ.நா. தீர்மானத்தின் கனதியின் விளைவே அதுவாகும்.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடிந்ததன் பின்னர் சிலவேளைகளில் இந்த அமைச்சர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று செயற்படுவார்கள் என்பது நாங்கள் யாவரும் அறிந்த விடயமாகும். இருந்த போதிலும் இலங்கை தொடர்பாக சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை இலங்கை புரிந்து நடக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அப்பட்டமான மனித உரிமை மீறலாகவே இருக்கின்றது. ஜனநாயக போராட்டத்தில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்துவதும், சட்டத்தின் முன்பாக அவர்களை நிறுத்துவதற்காக பொலிஸ் நிலையங்கள் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிகள் முன்னெடுப்பது எல்லாம் அராஜகமான செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல் ரீதியான ஜனநாயக போராட்டங்கள்,பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதிக்கு முன்பாகவே நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தவேளையில் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்தி பேரணியை நடாத்தியதை விரும்பாமல் அவர்களை அச்சுறுத்துவது என்பது இந்த நாடு ஒரே நாடு ஒரே சட்டத்தின் கீழா இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டின் ஜனாதிபதி கோட்டபாஜராஜபக்ச தான் ஒரு சுற்றாடல்காப்பான் வனவளத்தையும் நாட்டையும் பாதுகாப்பவன் என்றால் நான் உண்மையிலையே அந்த வார்த்தைகளை விரும்புகிறேன்.ஆனால் செயல்வடிவத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு ஒருதடவை வரவேண்டும் என்பதை நான் விரும்புகிறேன் வேண்டுகோள்விடுகின்றேன்.

மட்டக்களப்பின் வனவளம் எப்படி பாதுக்காகப்படுகிறது, அத்துமீறப்படுகின்றது,சேனைப்பயிர்ச்செய்கை என்ற ரீதியிலே வனவளம் காவுகொள்ளப்படுகின்றது. இந்த மாவட்டத்தின் கனியவளங்களான இல்மனைட், மண் எப்படி அழிக்கப்படுகின்றன.

எதிர்காலத்திலே மட்டக்களப்பு மாவட்டம் மீண்டும் ஓர் அத்திப்பட்டி கிராமமாக மாறும் சூழ்நிலையில் இருப்பதை எமது ஜனாதிபதி இந்த நாட்டின் ஜனாதிபதி மட்டக்களப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி இங்குவந்து மண்கொள்ளையர்கள் செய்யும் அநியாயத்தை பார்க்கவேண்டும்.

இந்த அரசின் அடி வருடிகளாக சில அரச அதிகார்கள் செயற்பட்டு இந்த மாவட்ட வளங்களை அழிப்பதை நேரடியாக அழிப்பதை பார்க்கவேண்டும். அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் அப்போதுதான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருப்பாரே ஒழிய இரு பிரதேசத்திங்கோ, ஒரு இனத்திற்கோ ஜனாதிபதியாக இருக்க கூடாது என்பது என்னுடைய வேண்டுகோளாக இருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...