Main Menu

திமுக ஆட்சிக்கு மக்கள் ஏங்குவதாக ஸ்டாலின் மனக்கணக்கு போடுகிறார்- தினகரன்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணல் திருட்டு, கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து விடும். அவர்கள் தற்போது கோர பசியில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட் டத்தில் அ.ம.மு.க. கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சிக்காக ஏங்கி கொண்டு இருப்பது போல ஸ்டாலின் மணக்கணக்கு போடுகிறார். அப்படி நம்பிக்கை இருந்தால் போலீசார் தபால் ஓட்டு போடுவதற்கு எதற்காக ரூ.2,000 பணம் கொடுக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற போவதாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்து விட்டு ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்துள்ளனர். ஊழல் செய்வதில் பெயர் பெற்ற தி.மு.க.வே வியந்து பார்க்கும் அளவுக்கு தற்போது அ.தி.மு.க.வினரும் ஊழல் செய்துள்ளனர். வாக்காளர்களை போட்டி போட்டு விலைக்கு வாங்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தீய சக்திகளிடம் இருந்தும், தமிழின துரோகிகளிடம் இருந்தும் தமிழகத்தை பாதுகாக்க அ.ம.மு.க. பாடுபடும். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணல் திருட்டு, கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து விடும். அவர்கள் தற்போது கோர பசியில் உள்ளனர். இதே போல அ.தி.மு.க.வினரும் மீண்டும் பதவியை தக்க வைக்க எந்த நிலைக்கும் செல்ல தயாராகி விட்டனர்.

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை தெரிந்து கொண்டு பலர் சென்னையை காலி செய்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். அதே போல அமைச்சர் சீனிவாசனும் இனி திண்டுக்கல்லில்தான் இருக்க போகிறார். அவர் எப்போது மைக்கை பிடித்து பேசினாலும் உளறிக்கொண்டிருக்கிறார். அவர் பேசுவது அவருக்கும் புரயாது, மற்றவர்களுக்கும் புரியாது. எனவே அவருக்கு வாக்காளர்கள் ஓய்வு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...