Main Menu

தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன ? வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் எழுத்தில் தெரிவியுங்கள் – பெரும்பான்மையின ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்

பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவை பெறவிரும்பினால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையினத்தை சேர்ந்த வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவை பெறவிரும்பினால் தங்களிடம்  தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு உள்ள தீர்வு என்னவென்பதை தெரிவிக்கவேண்டும் என வி;க்னேஸ்வரன் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

தாங்;கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு என்ன செய்வார்கள் என்பதை தெரிவிக்கின்ற துணிவு எவருக்காவது இருந்தால் நாங்கள் அந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து சிந்திப்போம் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்கள் மேடையில் எதனையாவது தெரிவித்துவிட்டு பின்னர் அந்த வாக்குறுதியை கைவிடலாம் என்பதால் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை எழுத்துமூலம் தெரிவிக்கவேண்டும் அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகளின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை எழுத்துமூலம்தரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை கடந்தகாலங்களில் வழங்கியிருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு அவர்கள் எவரும் முற்போக்கான தீர்வை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் 2000 ம் ஆண்டு அரசமைப்பு மாற்றங்கள் ஊடாக தீர்வை முன்வைப்பதற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த சந்திரிகா குமாரதுங்க  மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

அவர்கள் அதனை செய்வோம் இதனை செய்வோம் என தெரிவிக்கின்றார்கள் ஆனால் இறுதியில் ஒன்றும் செய்யமாட்;டார்கள் என குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒரு தலைவர் எதனையாவது வழங்க முயற்சித்தால் ஏனையவர்கள் அதற்கு எதிராக செயற்படுவார்கள் அதனை சீர் குலைப்பதற்கு அவர்கள் அனைத்தையும் செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதிகமாக எதனையும் கேட்கவில்லை தற்போதும் யாராவது அனுராதபுரத்தை கடந்து வவுனியா சென்றால் தமிழில் பேசுவார்கள் அவர்களே உண்மையான தமிழர்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் தமிழ்பேசும் பகுதிகளை அங்கீகரிக்குமாறே கேட்டுக்கொள்கின்றோம் இதன் மூலம் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...