Main Menu

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள் விடயத்தில் இந்தியாவின் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்: எம்.எ.சுமந்திரன்

தமிழ் தேசிய பிரச்சினைகள் எதனையும் பற்றி பேசாத ஒருவர் ஜனாதிபதியாகியுள்ளார். ஆகவே அவர் மூலமாக தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எனினும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும்  சந்தர்ப்பங்களை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் கூறினார். தமிழ் மக்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதிக்கு நிச்சயமாக வலியுறுத்துவார். எனினும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள் விடயத்தில் இந்தியாவின் ஈடுபாட்டை இன்னும் அதிகமாக இருக்க வேண்டுமென  நாம் விரும்புகின்றோம் எனவும் அவர் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாமோ அல்லது தமிழ் மக்களோ எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் இந்த மாற்றத்தின் விளைவுகள் எவ்வாறானது என்ற எண்ணத்தில் மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். எனினும்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனநாயக ரீதியில் வெற்றிபெற்றுள்ள நிலையில் ஜனநாயக நாட்டில் அவருடன் சேர்ந்து பயணிக்க நாமும் தயராக உள்ளோம். தான் சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளில் வெற்றிபெற்றுள்ளதாகவும் எனினும் ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டின் சகல மக்களுக்குமான தலைமைத்துவ ரீதியில் என்னுடன் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து பயணிக்க வரவேண்டும் என கூறினார். 

எவ்வாறு இருப்பினும் அவர் அதிகளவான வாக்குகளை பெற்றாலும் கூட தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் அவருக்கு கிடைக்கவில்லை. வடக்கு கிழக்கில் 10 சதவீத தமிழ் வாக்குகளை கூட பெற்றிருக்கவில்லை. இது அவரை தாக்கத்துக்கு உள்ளாக்கும் விடயமாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களும் கிறிஸ்தவ மக்களும் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு ஆதரவை வழங்கவில்லை. சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே அவருக்கு கிடைத்தது ஒரு இழுக்காக கருதலாம். அதனாலோ என்னவோ அவர் தமிழ் பேசும் மக்களை தன்னுடன் இணைய அழைப்பு விடுத்திருக்க முடியும். 

நாம் அவருக்கு கூறுவது ஒன்றுதான்,  தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவில்லை என்றால் இன்னமும் அவர் மீது  தமிழ்மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்பதேயாகும். ஆகவே தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி உடனடியாக முன்வரவேண்டும். அப்படியான ஒரு செயற்பாட்டில் கலந்துரையாடி இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். இவற்றை நாம் அவர்களிடம் கூறியுள்ளோம். எனினும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகள் குறித்த விடயத்தில் அவர்கள் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பார்கள் என நம்பிக்கை இன்னமும் இல்லை. கடந்த காலத்தில் பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்த நேரத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாய தேவை எமக்கு இருந்தது. தீர்வு விடயத்தில் அது முடிவுக்கு கொண்டுவர முடியாது போனாலும் கூட நாம் வெகுதூரம் இதில் பயணித்தோம். அதன் விளைவாக அரசியல் அமைப்பு வரைபு ஒன்றினை கூட உருவாக்கிக்கொள்ள முடிந்தது. தீர்வை எட்ட சிறிய நகர்வுகள் இருந்த நேரத்தில் பிரதான கட்சிகள் முரண்பட்டு ஆட்சியை குழப்பினர். 

தமிழ் தேசிய பிரச்சினைகள் எதனையும் பற்றி பேசாத ஒருவர் ஜனாதிபதியாகியுள்ளார். ஆகவே அவர் மூலமாக தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எனினும் சந்தர்ப்பங்களை உருவாக்குவோம். தமிழ் மக்கள் ஜனாதிபதியை  புறக்கணித்தமையை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டுகின்றது. அவ்வாறு இருக்கையில் தமிழ் மக்களின் தலைமைகளுடன் பேசுவதே சிறந்த தெரிவாக இருக்கும். கோத்தாபய ராஜபக் ஷவுடன் நான் தனித்தே பேசியிருந்தேன். கட்சியாக பேசவில்லை. இந்த சந்தர்ப்பங்களில் அரசியல் தீர்வு விடயத்தில் அவருக்கு தெளிவான சிந்தனை இருக்கவில்லை. ஏனைய விடயங்கள் குறித்து பேசினார். தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னை தனியாகவே சந்தித்தார்கள். ஒரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பாக பேச அவர்கள் தயராக இருக்கவில்லை. அரசியல் தீர்வு குறித்து அவர்கள் பேச முன்வரவில்லை. அவர்களை பொறுத்தவரையில் தெளிவான அரசியல் தீர்வு நகர்வுகள் இருக்கவில்லை. 

அரசியல் தீர்வில் அதிகார பகிர்வு விடயத்தில் 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வுகளை வழங்குவதாக மஹிந்த ராஜபக் ஷ வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். எமக்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கும் இந்த வாக்குறுதி கொடுத்துள்ளனர். கடந்த தடவை இந்திய பிரதமர் மோடி அவர்கள் இலங்கைக்கு வந்தவுடன் பேசினோம். தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் இந்தியாவின் ஈடுபாடு இருக்கும். இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆகவே தமிழ் மக்களுக்கு ஏதும் நிகழ்ந்தால் அவர்கள் அக்கறை செலுத்துவார்கள். தேர்தல் முடிவுகளை பார்த்து தமிழ் மக்களின் விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற விடயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிற்கு வலியுறுத்துவார். அது நிச்சயமாக நடைபெறும் என்றார். 

பகிரவும்...