Main Menu

தமிழ் கூட்டமைப்புடனும் பேச்சு நடத்த தயார் : பிரதான அரசியல் கட்சிகள் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தன் -விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் கட்சிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் கூறுகின்றனர்.

 இம்முறை தேர்தலில் தமிழ் -முஸ்லிம் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தி எனவும் தெரிவித்தனர். 

கடந்த ஜனாதிபதி தேர்தல்களை போல் அல்லாது பல புதிய கட்சிகள் பிரதான கட்சிகள் என பலரது பெயர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தமது இருப்பை தக்கவைக்க தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதான வேட்பாளர்கள் கொண்ட கட்சிகள் என்ன செய்யப்போகின்றனர் என வினவியமைக்கே அவர்களின் நிலைப்பாடுகளை முன்வைத்தனர். 

ஐ.தே.க -அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல 

இது குறித்து ஐக்கிய தேசிய சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகையில். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியாக தேர்தலில் களமிறங்க நாம் ஆயத்தமாகி வருகின்றோம். இப்போதும் எமது கூட்டணியில் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் வடக்கு கிழக்கில் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் உள்ளார். இந்த காரணியை அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். அதேபோல் வடக்கு கிழக்கில் தமிழ் ஏனைய கட்சிகள் அமைப்புகள் ஆகியவற்றுடன் பேசி அவர்களின் ஆதரவிகளை பெற்றுக்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவர் ஆர்.சம்பந்தன் தாம் பிளவுபடாத நாட்டுக்குள் அதிகார பகிர்வை விரும்புவதாக பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களின் அதே நிலைப்பாடே எமதும் வாக்குறுதியாக உள்ளது. பிளவுபடாத பிரிக்க முடியாத ஒற்றையாற்றி இராஜியத்தில் அதியுச்ச அதிகாரபகிர்வு வழங்க நாமும் தயார். வடக்கு கிழக்கு மக்களுக்கான விசேட கவனம் செலுத்த நாம் தயாராக இருப்பதை எமது வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆகவே நாம் தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார். 

பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த 

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த கூறுகையில். எமது ஆட்சியில் நாம் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த பின்னர் வடக்கு கிழக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தோம். யுத்தம் முடிந்தவுடன் உடனடியாக எதனையும் செய்ய முடியாது. அதற்கான கால அவகாசம் வேண்டும். எனினும் ஒரு  சில ஆண்டுகளில் நாம் வடக்கு கிழக்கில் துரிதமான நடவடிக்கைகளை கையாண்டு வடக்கை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களை கையாண்டோம். 

தேர்தலை நடத்தி வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தினோம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசாங்கம் அனைத்தையும் பறித்துவிட்டது. இன்று வடக்கு கிழக்கு மாகாணசபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்று இல்லாத நிலைமை உள்ளது. தமிழர் தரப்பும் இந்த அரசாங்கத்திற்கு அர்த்தமற்ற ஆதரவை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை செய்து வருகின்றது. எவ்வறு இருப்பினும் தமிழர் தரப்பு சிந்தித்து சரியான தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டிய நேரம் இது. நாம் சகல தமிழ் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஜனநாயக ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் ஏனைய தமிழ் தலைவர்கள் அனைவருடனும் பேச தயாராக உள்ளோம். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும். ஆகவே தமிழ் தலைமைகள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார். 

மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் ரில்வின் சில்வா 

மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்னவென வினவியதற்கு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்லா கூறுகையில், பிரதான இரண்டு கட்சிகளையும் நம்பியே தமிழ் மக்கள் இத்தனை காலமாக அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். ஐக்கிய தேசிய கட்சி இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்காக செய்த நலன்கள் ஒன்றும் இல்லை. ஆனால் தமிழ் அரசியல் கட்சியில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒட்டிக்கொண்டு ஆதரவுகளை வழங்கி வருகின்றனர், எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் சரியாக சிந்தித்து மாற்றம் ஒன்றினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

எமக்கு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை விடவும் தமிழ் மக்களுடன் பேசவே விரும்புகின்றோம். தமிழ் மக்களுடன் நேரடியான உறவை கையாவே முயற்சிக்கின்றோம். எனினும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள எமக்கு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புகளும் அவசியம். அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகள் எம்மீது நம்பிக்கை வைத்தால் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக உள்ளோம். இலங்கை மக்களுக்கான தலைமைத்துவத்தை வழங்கவே நாம் முயற்சிகின்றோம் என்றார்.

பகிரவும்...