Main Menu

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் கூட்டமைப்பாகவே செயற்படும் சி.வி.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகவே செயற்படும் தேர்தல்களிலும் தற்போது எவ்வாறு செயற்படுகின்றதோ அவ்வாறே தொடர்ந்தும் செயற்படும் என இலங்கை தமிழ்ரசுக்கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் அவை தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்து கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் எனவும் புதிய தலைமையின் கீழ் ஒன்று பட்டு செயற்படுவோம் என சில கட்சிகள் கூறி வருவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. சிலருக்கு தாங்கள் தான் தலைமையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்தும் கட்சிகளாக உருவாகியும் செயற்படுகின்றார்கள். 

புதிதாக உருவாக்கப்பட்ட சில கட்சிகளுக்கு தலைவர் யார் செயலாளர் யார் உறுப்பினர்கள் யார் எத்தனைபேர் இருக்கவேண்டும் என்று தெரியாத நிலையில் அறிக்கைகளும் ஊடக சந்திப்புக்களும் நிகழ்வுகளையும் நடத்துகின்றார்கள்.

அரசியல் கட்சி என்றால் அதிலும் மக்களின் பிரதிநிதிகள் என்றால் மக்களால் தெரிவு செய்யப்பட்டு செயற்படுபவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற பிரயோகத்திற்குள் வருவார்கள். யார் எவ்வாறு எதைச் செய்தாலும் மக்களின் தீர்ப்புக்கு கட்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். தலைமை மாறவேண்டும் எனக் கூறுபவர்களும் தலைமைத்துவம் தேவை எனக்கூறுபவர்களும் தங்கள் தங்கள் செயற்பாடுகளில் இருந்து மக்கள் மத்தியில் செல்லட்டும் மக்கள் தங்களது புள்ளடிகளை இட்டு தமக்கு யார் தேவை என்பதை அடையாளப்படுத்துவார்கள். அதன் பின்னர் ஒற்றுமை எனக் கூறுபவர்களும் தலைமை எனக் கூறுபவர்களும் ஓரணியில் திரண்டு செயற்படும் .

மக்கள் முன் செல்கின்றவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எத்தகைய கோரிக்கைகள் கொள்கைகளை முன்வைக்கின்றதே அதையே மற்றவர்களும் வைப்பார்கள். அவ்வாறு வைக்கும் போது மக்கள் எவ்வாறு யாருக்கு யாரை தெரிவு செய்யவேண்டும் என்ற முடிவினை எடுப்பார்கள். 

இதனை விடுத்து தாங்கள் தான் தலைமையாகவேண்டும் தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று கூறுபவர்கள் பற்றி நாங்கள் எதுவும் கூறமுடியாது மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள். அன்னப்பட்சியைப்போன்று பாலையும் நீரையும் பிரித்தெடுப்பார்கள் என்றார்.

பகிரவும்...