Main Menu

தமிழர் பிரதேசங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

தமிழர் பிரதேசங்களில் இன்றையதியம் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷடிக்கப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு உட்பட பல தமிழர் பிரதேசங்களில் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை,  மூதூர் கிழக்கு – சம்பூர் ஆலங்குளம் 

திருகோணமலை,  மூதூர் கிழக்கு – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (27)மாலை இடம் பெற்றது.

மிகவும் பாதுகாப்புகெடுபிடிக்கும் மத்தியில் மக்கள் தோரணங்கள் அமைத்து மாவீரர் நினைவு நாளை கொண்டாடினர்.

இதில் பெருந்திரளான மக்கள் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சிவில் உடையில் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பு – வாகரை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசிய மாவீரர் தினம் புதன்கிழமை மாலை 6.05 மணிக்கு மழைக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வாகரைப் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவு கூரலின் போது வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கு மூன்று நிமிடம் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து வாகரைப் பிரதேசத்தின் மாங்கேணியைச் சேர்ந்த 4 உறவுகளை உயிர் தியாகம் செய்த வேலன் தங்கம்மா (வயது 77) என்ற தாயினால் மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், பின்னர் கலந்து கொண்ட அனைவராலும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாகரைப் பிரதேசத்தில் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அச்சத்திற்கு மத்தியில் இடம்பெற்ற தேசிய மாவீரர் தினத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதேச சபை உறுப்பினர்களான க.கமலநேசன், கி.சேயோன், வ.சுரேந்திரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்பாட்டாளர்களினால் தென்னம் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, மாவடிமுன்மாரி, தாண்டியடி, வாகரை ஆகிய நான்கு இடங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் தேசிய மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் – மடு – பண்டிவிரிச்சான்

திடீர் என அமைக்கப்பட்ட இராணுவ முகாம் , அகற்றப்பட்ட நினைவு தூபி திடீர் மின் வெட்டு மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் என அனைத்து தடைகளையும் தாண்டி எழுச்சி பூர்வமாக மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று புதன் கிழமை மாலை  நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக இராணுவத்தினரால் தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நினைவேந்தல் நிகழ்வுக்கு என அமைக்கப்பட்ட நினைவு தூபி அகற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் இன்று புதன் கிழமை மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் மத்தியில் மாவீரர் தினம் எழுச்சியுடன் இடம் பெற்றது.

பண்டிவிரிச்சான் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் பண்டிவிருச்சான் பிரதான பாதையில் திடீர் சோதனை சாவடி அமைக்கப்பட்டதுடன் புலனாய்வுத்துறையினர் மற்றும் பொலிஸ் ,இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் அச்சம் இன்றி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதன் , நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி மன்னார் மற்றும் நானாட்டன் நகர பிரதேச சபை உப தவிசாளர்கள் அருட்தந்தையர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆனந்தபுரம் – இரட்டைவாய்க்கால் 

ஆனந்தபுரம் சமரில் வீரமரணமடைந்த தளபதிகள் விதைக்கப்பட்ட முல்லைத்தீவு  இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது .

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடரினை மாவீரர் லெப் கேணல் நிலான் அவர்களின் துணைவியார் ஏற்றினார். சம நேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது .

கிளிநொச்சி – முழங்காவில்

கிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

1750 ஈகைச்சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.

மட்டக்களப்பு – கல்லடி

மட்டக்களப்பு – கல்லடி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கூடியிருந்தபோதிலும் பொலிஸார் தடை செய்தமையால் பொதுமக்கள் தமது அஞ்சலியை வீதியில் நின்றவாறு மேற்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்குகேற்றி அஞ்சலி செலுத்துவதற்காக  இன்று புதன்கிழமை (27) மாலை துப்புரவுப்பணியில் இளைஞர்கள்  ஈடுபட்டபோது  பொலிசார் அதனை தடுத்து நிறுத்தி சோடிக்கப்பட்ட தோரணங்கள் கழற்றப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது  

குறித்த தூபி முருகன் கோவில் ஆலயத்திற்கு அருகில் கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மாவீரர்களை நினைவு கூறுவதற்காக அமைக்கப்பட்டது. இருந்தபோதும் அது பற்றைவளர்ந்து கவனிப்பாரற்று கிடந்துள்ளது.

இந்த நிலையில்  கடந்த ஆண்டு அந்த தூபியில் சிலர் சென்று விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து இந்த முறை அதனை பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவதற்காக சம்பவதினமான இன்று புதன்கிழமை மாலை துப்புரவு பணியில் ஈடுபட்டு தோரணங்கள் கட்டப்பட்ட நிலையில் கோவில் நிர்வாகம் இந்த மாவீரர் நினைவு தூபியில் விளக்கு ஏற்றக் கூடாது என கூறியுள்ளனர் 

இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிசார் வந்து இதில் விளக்கு ஏற்ற முடியாது மீறி ஏற்றும் பட்டத்தில் கைது செய்யப்படும் என தெரிவித்து கட்டப்பட்ட தோரணங்களை களற்றவைத்து விளக்கு ஏற்றிஅ ஞ்சலி செய்ய தடைவிதித்தனர். 

யாழ்.கொடிகாமம்

யாழ்ப்பாணம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் நிகழ்வு துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

நினைவேந்தலில் முதன்மைச் சுடரினை மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்தனர்.

மாவீரர் தின நிகழ்வில் மாவீரர்களின் குடும்பங்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். கோப்பாய்

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தின நினைவுகூரல் இடம்பெற்றது.

இன்று மாலை 6.05 மணிக்கு பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பகிரவும்...