Main Menu

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “2009 முதல் காணாமலாக்கப்பட்ட ஒரு குழந்தையைகூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.

பெப்ரவரி 2017 முதல் எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம்.

இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர்.

இப்போது, அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் சிந்தனையாளர்களும் ஐ.நா.வில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

எனவே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்காவின் உதவியை பகிரங்கமாக கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாளில், சிங்கள இனப்படுகொலை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்காவின் உதவியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம்.

இலங்கையில் அமெரிக்க தலையீட்டைக் கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும்.

இல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பகிரவும்...