Main Menu

தமிழக மீனவர்களை கைது செய்துள்ளமை இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் – அன்புமணி ராமதாஸ்

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 40 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளமை, இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு நீதிக்கோரி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், தற்போது, மீண்டும் 08 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் இந்த இறையாண்மைக்குச் சவால் விடுப்பதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பதில் நீதவான் ஷாலினி ஜெயபாலச்சந்திரன் முன்னிலையில் அவர்கள் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் – மண்டபம் வடக்கு மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்களும் இரு படகுகளுடன் நேற்று நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 70 படகுகளுடன் 537 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டு இந்திய மீனவர்கள் இராமேஸ்வரத்தில் போராடுவது கவலையளிப்பதாக வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...
0Shares