Main Menu

தமிழகத்தில் ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த முதலாம் திகதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 500ஐத் தாண்டியே பதிவாகிவருகிறது.

இதற்கு கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் மூலம் வைரஸ் பரவியதே காரணம் என்று கூறப்படுகிறது.

நேற்றைய நிலைவரப்படி மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆகக் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று 669 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 47ஆக உயர்ந்துள்ளன.

அத்துடன், கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இன்று 135 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 959ஆக உயர்ந்துள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதியானது. அத்துடன் செங்கல்பட்டி 43 பேர், கிருஷ்ணகிரியில் 10 பேர், திருநெல்வேலி-10, பெரம்பலூர்-9, காஞ்சிபுரம்-8 ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 6 பேருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

அரியலூர், மதுரை மாவட்டங்களில் தலா 4 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன் செங்கல்பட்டைச் சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அத்துடன் சென்னையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரும் திருவள்ளூரைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரும் இன்று மரணித்துள்ளனர்.

பகிரவும்...