Main Menu

தந்தையின் கல்லறையை தேடி 55 ஆண்டுக்கு பிறகு நெல்லையில் இருந்து மலேசியா சென்ற சமூக ஆர்வலர்

தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன் (வயது 56). திருமாறனின் தந்தை பூங்குன்றன் என்ற ராம சுந்தரம். தாயார் ராதாபாய். ராமசுந்தரம் மலேசியா நாட்டில் ஆசிரியராக வேலைபார்த்தார். 1967-ம் ஆண்டு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார். அப்போது அவரது மகன் திருமாறன் பிறந்து 6 மாதங்களே ஆகியிருந்தது. இதனால் அவரது தாயார், கணவரின் உடலை மலேசியாவிலேயே அடக்கம் செய்து விட்டு மகனை அழைத்து கொண்டு சொந்த ஊர் வந்து விட்டார். இந்தியாவுக்கு வந்த சில ஆண்டுகளில் ராதாபாயும் இறந்து விட்டார். இதனால் திருமாறன் அனாதையானார். பின்னர் அவர் சமூக பணிகளில் ஆர்வம் காட்டினார். மேலும் அனாதை ஆசிரமம் தொடங்கி அவர்களை பராமரித்து வந்தார். அனாதைகளுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது என காலத்தை கடத்தி வந்தார். இருந்தாலும் அவர் மனதில் தந்தை பற்றிய நினைவுகள் அடிக்கடி தோன்றி கொண்டே இருந்தது. அறியாப்பருவத்தில் இறந்துபோன தந்தையின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து மலேசியாவில் அவரது குடும்பத்தினர் தங்கி இருந்த பகுதியை கூகுளில் தேடி கண்டுபிடித்தார். பின்னர் தனது தந்தை ஆசிரியராக இருந்தபோது அவரிடம் படித்த மாணவர்கள் விபரத்தை திரட்டினார். இதில் மோகனராவ், நாகப்பன் ஆகியோர் பற்றிய விபரங்கள் கிடைத்தது. அவர்கள் மூலம் தனது தந்தையின் கல்லறை மலேசியாவின் கெர்லிங் பகுதியில் இருப்பதை அறிந்து கொண்டார். இதையடுத்து மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டார். 55 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தந்தையின் கல்லறையை தேடி கடந்த 8-ந் தேதி மலேசியாவுக்கு சென்றார். அங்கு தனது தந்தையிடம் படித்த மாணவர்கள் உதவியுடன் அவரது கல்லறையை கண்டுபிடித்தார். ஒரு புதருக்குள் இருந்த கல்லறையில் தந்தையின் பிறப்பு, இறப்பு பற்றிய விபரங்கள் இருந்ததை பார்த்து கண்ணீர் விட்டார். பின்னர் அந்த கல்லறை முன்பிருந்து புகைப்படம் எடுத்து கொண்டு கடந்த 16-ந் தேதி தந்தையின் நினைவுகளை சுமந்து கொண்டு மீண்டும் நெல்லை திரும்பினார்.

பகிரவும்...