Main Menu

தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெய்சங்கரிடம் ரணில் கோரிக்கை

இலங்கைக்கு கூடிய விரைவில் தடுப்பூசியை வழங்க டெல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, கொவிட் வைரஸ் பரவலினால் பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுமே பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்தியா பொருளாதார ரீதியில் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு விஜயமேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கையில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்திய ஒத்துழைப்பு இன்றியமையாததது என்பதுடன், கொரோனா தடுப்பூசியை கூடிய விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

வைரஸ் தொற்றினால் இரு நாடுகளுமே எதிர்க்கொண்டுள்ள சவால்கள் குறித்து குறித்த பேச்சுவார்த்தையில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளில் டெல்லி கூடிய கவனம் செலுத்தும் என இதன்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...