Main Menu

தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உண்டு: இஸ்ரேல் பிரதமர்

தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குத்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய தளபதி அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலினால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரானின் ஜனாதிபதி ஹசன் ருஹானி, ஈரானின் இதயம் காயப்பட்டிருக்கிறது எனவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தனது கொடூரக் குற்றத்திற்காக பழிவாங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இவ்விவகாரம் குறித்து நெதன்யாகு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ‘தன் நாட்டைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பது போல, அமெரிக்காவுக்கும் உரிமை உள்ளது. அமெரிக்க மக்கள் உட்பட பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குத்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலிமானி, முக்கியக் காரணமாக இருந்தார் என்று பதிவிட்டுள்ளார்.

ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாக அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.

அதற்குப் பதிலடியாகவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பணிப்புரைக்கு அமைய நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

பகிரவும்...