Main Menu

லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி

மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின் தகவல்களைத் தொடர்ந்து அவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய நபர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டார். அவருக்கு துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால், சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் எனவும் குழந்தை 3 வயது மதிக்கத்தக்கது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் உயிரிழந்தவர்கள் குறித்த மேலதிக தகல்கள் சில வெளியாகியுள்ளன.

அயலவர்களின் தகவலின் அடிப்படையில் நள்ளிரவு 1 மணியளவில் குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பொலிசார் 3 வயதான கைலாஷ் குகராஜ் மற்றும் அவரது தாயாரான 36 வயது பூர்ண காமேஷ் சிவராஜ் ஆகியோரின் சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.

இதில் 42 வயதான குகராஜ் சிதம்பரநாதன் என்பவர் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசிய தமிழர்களான இந்த தம்பதி, அயலவர்களுடன் மிக நெருக்கமாக பழகியதாகவும், சிறந்த குடும்பமாக விளங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவ்வப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பல நாள் நள்ளிரவு தாண்டியும் வாக்குவாதம் நீடித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த பூர்னாவின் உறவினர் ஒருவரே ஞாயிறன்று பொலிசாரின் உதவியை நாடி, கடந்த ஒரு மாத காலமாக பூர்னா தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார், பூர்னாவின் குடியிருப்புக்கு பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் எந்த பதிலும் கிடைக்காத நிலையில், பொலிசார் வலுக்கட்டாயமாக குடியிருப்புக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதாக கூற முடியாது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ள பொலிசார், இவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் தகவல் அறிவிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...