Main Menu

டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் நாட்டில் அவரும், அவரது மகன் ஹன்டாரும் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; இதை செய்யாவிட்டால் உக்ரைனுக்கு தருகிற பயங்கரவாத ஒழிப்பு நிதியை நிறுத்திவிடுவோம் என அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஜனாதிபதி டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, டிரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் தொடங்கினர்.
ஒரு மாதத்துக்கும் மேலாக நாடாளுமன்ற புலனாய்வு குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இதற்கிடையே, விசாரணை தொடர்பான அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
அந்த விசாரணை முடிவில் ‘தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது விசாரணையை அறிவிக்க உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

டொனால்டு டிரம்ப் மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசி

இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் (செனெட்) சபாநாயகர் நான்சி பெலோசி இன்று அனுமதி வழங்கியுள்ளார். 
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பாராளுமன்றத்தில் தன்மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயாராக உள்ளதாகவும், அதில் நிச்சயம் வெற்றிபெறுவேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

பகிரவும்...