Main Menu

டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணித்தவர்களை குறிவைத்து வழிப்பறி!

ஜோலார்பேட்டை அருகே, ரயில் டிடிஇ போல் நடித்து, டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணித்தவர்களை குறிவைத்து வழிப்பறி செய்து மீண்டும் கைவரிசையை காட்டியிருப்பவனை ரயில்வே போலீசார் தேடிவருகின்றனர்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகர் போல வேடமிட்டு நடிகர் கவுண்டமணி, ஏமாற்றும் காட்சிகளை போலவே ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், வெள்ளிக்கிழமை அதிகாலை வாக்கில், மங்களூர் எக்ஸ்பிரசில், பயணி ஒருவர் ஏறி, சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது, படிக்கட்டு ஓரமாக, டிப்டாப் உடையில், பயணச்சீட்டு பரிசோதகர் போல் ஒருவர் நின்றுள்ளார். அந்த நபர், பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களை கண்காணித்து வந்தபோதிலும், பெட்டியில் பயணித்த பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்துள்ளார்.

வெள்ளைநிற மேல்சட்டை, காற்சட்டை அணிந்திருந்ததால், ரயில் பயணிகள் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதனை வாகாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், ரயில் பயணச்சீட்டு எடுக்காமல் இருந்தவர்களை கண்டறிந்து, அபராதம் விதிப்பது போல், வசூல் வேட்டை நடத்தியிருக்கிறான்.

இவ்வாறு, 20க்கும் மேற்பட்டோரை, அதிகாலை நேரத்தில், பிடித்து, வசூல் வேட்டை நடத்திய அந்த நபர், பணத்தை பறிகொடுத்தவர்கள் ஏமாற்றப்பட்டதை அறிவதற்கு முன்பே, வேறொரு ரயில் நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒரே ஒரு பயணி மட்டும், சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு பரிசோதகர்கள் அறைக்குச் சென்று, தன்னிடம் மிரட்டி பணம் வசூலித்த தகவலைச் சொல்லி, அவனது புகைப்படத்தை காட்டி விசாரித்திருக்கிறார்.

அப்போது தான், அந்த நபர், வேறு யாருமல்ல, இதேபோன்று, அண்மையில் நடைபெற்ற சம்பவத்தில், சிறைச் சென்றுவந்தவன் எனத் தெரியவந்திருக்கிறது. சேலத்தை சேர்ந்த அல் ஜிலானி என்பவன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னையிலிருந்து சேலம் சென்ற ரயிலில், டிக்கெட் எடுக்காத ஒரு பயணியை அடித்து உதைத்த விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவன்.

சென்னையிலிருந்து, ஜோலார்பேட்டைக்கு வெறும் 75 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டியவர்கள், அதை மிச்சம் பிடிப்பதாக நினைத்து, திருட்டுத்தனமாக ரயில் பயணித்து, பல ஆயிரம் ரூபாயை இழந்து நிற்பதோடு, திருடனுக்கு தேள் கொட்டியது போல், சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், அதனை ஜீரணிக்கவும் முடியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்..

சிறை தண்டனை அனுபவித்து வந்த உடனேயே, மீண்டும் கைவரிசையைக் காட்டியுள்ள, வழிப்பறி மோசடியாளன் சேலம் அல் ஜிலானியை, ரயில்வே போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

பகிரவும்...