Main Menu

ஜேர்மனியில் ஹிட்லரின் படங்களைப் பகிர்ந்து கொண்ட 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

ஜேர்மனியில் வலதுசாரி கருத்துக்களைப் பரப்பிய, 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அடோல்ஃப் ஹிட்லரின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதற்காகவும், கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவது மற்றும் எரிவாயு அறைகளில் அகதிகளைக் காட்டும் வன்முறை நவ-நாஜி பிரச்சாரங்களுக்காகவும் இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

என்.ஆர்.டபிள்யூ உட்துறை அமைச்சர் ஹெர்பர்ட் ரியால் ஒரு விசாரணையைத் தொடங்கி, இந்த சம்பவத்தை ‘என்.ஆர்.டபிள்யூ பொலிஸாருக்கு அவமானம்’ என்று முத்திரை குத்தியுள்ளார்.

34 பொலிஸ் நிலையங்கள் மற்றும் தனியார் வீடுகளில் 200க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது, வாட்ஸ்அப் அரட்டை குழுக்களில் 126 வன்முறை நியோ-நாஜி படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விஷவாயு அறையில் கொடுமைப்படுத்தப்படும் மக்கள், ஸ்வஸ்திகாக்கள் மற்றும் அகதிகளின் படங்கள், என்பன இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாக நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் நியூயோர்க் டைம்ஸ், ஒரு கறுப்பின மனிதர் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு படமும் அந்த வட்டாரத்தில் இருப்பதாக தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து எசென் நகரில் பணிபுரிந்த 25 பேர் உட்பட அதிகாரிகள், நேற்று (புதன்கிழமை) தங்கள் துப்பாக்கிகளையும் பேட்ஜ்களையும் கையளித்தனர்.

இந்தக்குழுவில் 14பேர் தாக்குதல் படங்களை தீவிரமாக பகிர்ந்ததற்காக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு காலம் இடைநீக்கம் செய்யப்படும் என்பது தெளிவாக இல்லை.

இதுகுறித்து எசென் நகரின் பொலிஸ்துறைத் தலைவர் பிராங்க் ரிக்டர் கூறுகையில், ‘நான் திகைத்து, வெட்கப்படுகிறேன்’ என கூறினார்.

இதேவேளை, ஒரு புதிய நாஜி கொலையாளி கும்பலின் பெயருடன் கையெழுத்திடப்பட்ட, புலம்பெயர்ந்த பின்னணி கொண்ட முக்கிய நபர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற பொலிஸ்துறை அதிகாரி மீது கடந்த மாதம் முதல் விசாரணை நடத்தி வருவதாக ஜேர்மன் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...