Main Menu

ஜப்பானை அச்சுறுத்தும் சூறாவளி – 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில், 8.1 இலட்சம் மக்களை அந்நாட்டு அரசு அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.

இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீ. இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீ. வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹைஷென் புயல் இன்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து கியூசூ தீவை தாக்கும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, குறித்த பகுதியில் இருந்து 8.1 இலட்சம் மக்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி பாதுகாப்பான பகுதியில் தங்கவைத்துள்ளது.

இதேநேரம், ஜப்பானிலுள்ள ஏனைய 10 மாகாணங்களிலும் உள்ள 55 இலட்சம் மக்களையும் வேறு பகுதிகளுக்கு வெளியேறி செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது.

மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுவதற்கு வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கையாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் அரசின் உத்தரவைத் தொடர்ந்து முக்கிய நகரங்களின் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இதனிடையே அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றதன் பின்னர் கருத்து வெளியிட்ட பிரதமர் ஷின்சோ அபே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கடலோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...