Main Menu

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டித் தொடரை முன்னிட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரை முன்னிட்டு, ஜப்பானில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய தற்போது ஒருநாளில் சுமார் பத்து இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் நான்காம் அலை காரணமாக மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து ஜூன் மாதத்தில் குறையத் தொடங்கியது. இதனால் கடந்த 23ஆம் திகதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்தவுள்ள ஜப்பான், அதற்காக தற்போது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதன்படி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 4 நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து எதிர்மறை சான்றிதழ் பெற்ற பிறகே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சில நாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வரும் தடகள வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதாவது, ஒரு வாரத்திற்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் எதிர்மறை என பெற்ற பிறகே ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக், எதிர்வரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பாரா ஒலிம்பிக், ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பகிரவும்...