Main Menu

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை(திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் நடக்கிறது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார்.

பின்னர் கிண்டி கவர்னர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு மாலை 5 மணிக்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் உயர் பொலிஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஜனாதிபதி செல்லும் வழி நெடுகிலும் பொலிஸார் சீரான இடைவெளியில் நின்று பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். விமானநிலையம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி வருகையையொட்டி செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை பொலிஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

விமானநிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலும், பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் தலைமைச்செயலகம் வரையிலும் பாதுகாப்பு ஒத்திகையை பொலிஸார் மேற்கொள்ள உள்ளனர்.

ஜனாதிபதி வருகையின்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...