Main Menu

ஜனாதிபதித் தேர்தல்: கூட்டமைப்புக்கு ஜே.வி.பி அழைப்பு

ஒரே கொள்கைகளையுடைய மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில், “கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத அரசியல் நாடகத்திற்கு பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசியல் பக்கத்தில் ஒன்றாக நிற்கும் இருகட்சிகள் என்றும் இது வரவேற்கத்தக்க மாற்றம் என்றும் பலர் எம்மிடம் கூறினார்கள்.

அத்தகைய சக்திகளுடன் ஒன்றாக வருவதை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் காணலாமென என்னால் கூறமுடியாது. ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, அதுவே செல்வதற்கான பாதை” என குறிப்பிட்டிருந்தார்.

சுமந்திரனின் இந்த கருத்து தொடர்பாக பதிலளிக்கும்போதே, பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுமந்திரனின் நிலைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு நேர்த்தியான கொள்கையின் அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.

ஆனால் ஏனைய கட்சிகள் எவ்வித கொள்கைகளுமற்ற விதத்திலேயே செயற்படுகின்றன. ஆகையால், கொள்கையின் அடிப்படையில் செயற்படும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது இலகுவானதாகும்.

மேலும் கூட்டமைப்பினர் இதுவரை ஆதரவு வழங்கிய கட்சிகள் அனைத்துமே அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

எனவே மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டமைப்பும் இணைந்த பயணம் ஜனாதிபதித் தேர்தலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...