Main Menu

ஜனவரி 31 இல் பிரெக்ஸிற் துறை மூடப்படும் : அரசாங்கம் அறிவிப்பு

பிரெக்ஸிற் காலக்கெடுவான 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான துறை மூடப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரெக்ஸிற் செயலாளர் ஸ்டீபன் பார்க்லே தலைமையிலான அரசாங்கத் துறை, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெளியேறுதல் மற்றும் எதிர்கால உறவு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிட்டது.

பிரெக்ஸிற் ஒப்பந்த சட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தம் நாளை பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில் 80 எம்பிக்கள் பெரும்பான்மை கொண்ட கொன்சர்வேற்றிவ் அரசாங்கத்தில் அது நிறைவேற்றப்படுமென நம்பப்படுகிறது.

இந்நிலையில் பிரெக்ஸிற் துறை மூடப்படுவது குறித்து இன்று ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு வேலை ஒன்றை தேடுவதற்கு இந்த தகவல் உதவுமென பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு பிரெக்ஸிற் மீதான மக்கள் வாக்கெடுப்பு முடிவை அடுத்து 2016 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் தெரேசா மே அவர்களால் இந்த துறை அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில் இந்த துறை மூன்று பிரெக்ஸிற் அமைச்சர்களைக் கொண்டுள்ளது.

முதலாவது பிரெக்ஸிற் அமைச்சராகப் பதவியேற்ற டேவிட் டேவிஸ், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் மே-யின் திட்டத்திற்கு உடன்படாமல் 2018 இல் பதவி விலகினார்.

அவரைத் தொடர்ந்து பிரெக்ஸிற் அமைச்சராகப் பதவியேற்ற தற்போதைய வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப், மே-யின் அணுகுமுறை காரணமாக நான்கு மாதங்களுக்குப் பின்னர் பதவி விலகினார்.

தற்போது பிரெக்ஸிற் அமைச்சராகப் பதவி வகிக்கும் பார்க்லே நொவெம்பர் 2018 இல் பொறுப்பேற்றார், கடந்த கோடையில் பொரிஸ் ஜோன்சன் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னரும் பார்க்லே இந்தப் பதவியில் தொடர்கிறார்.

பகிரவும்...