Main Menu

சோனியாவுக்கு சிகிச்சை- ராகுல் காந்தி இன்று அமெரிக்கா பயணம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக இன்று அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருடன் ராகுல் காந்தியும் பயணம் மேற்கொள்கிறார்.

சோனியா காந்தி- ராகுல் காந்திபுதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்து விட்டார்.

காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர் தலைவர் பதவியில் இருந்து விலகி, ராகுலிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். அதன்பிறகு அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று உடல்நல பரிசோதனை செய்து வருவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் அவர் அமெரிக்கா சென்று டாக்டர்களிடம் சிகிச்சை தொடர்பான ஆலோசனையைப் பெற்றுத் திரும்பினார். உடல்நல பரிசோதனை செய்து ஓராண்டுக்கும் மேல் ஆகி விட்டதால் மீண்டும் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார்.

அதன்படி சோனியா இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அவருடன் ராகுலும் பயணமாகிறார். வழக்கமாக சோனியா அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு புறப்பட்டு செல்லும்போது ராகுல் அல்லது பிரியங்கா உடன் செல்வார்கள்.

பிரியங்கா ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளார். அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கு சிறிய கட்டி ஒன்றை அறுவை சிகிச்சை செய்து அகற்ற உள்ளனர். இதற்காக ராபர்ட்டும், பிரியங்காவும் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர்.

சோனியா அமெரிக்கா சென்று சேர்ந்ததும் அவருடன் பிரியங்கா இணைந்து கொள்ள உள்ளார். சோனியா, பிரியங்கா, ராகுல் மூவரும் சுமார் 2 வாரம் அமெரிக்காவில் தங்கி இருப்பார்கள் என்று தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். நேற்று முன்தினம் அவர் தனது ராஜினாமாவை உறுதிபடுத்தினார்.

இன்று அவர் அமெரிக்கா செல்லும் நிலையில் அடுத்த வாரம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...