Main Menu

சூரியக் குடும்பத்திலிருந்து 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமிக்கு ஒப்பான புதிய கிரகம்!

சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்றே இன்னொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டபோது GJ357 நட்சத்திரத்தை 3 கோள்கள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்திரன், செவ்வாய் மற்றும் ஏனைய கிரகங்கள் என பூமியைத் தாண்டிய மனிதனின் பயணங்கள் தொடங்கி விட்ட நிலையில், பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் புதிய கிரகங்களைக் கண்டறியும் முயற்சிகளிலும் அன்றாடம் புதிய புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளியில் புதிய கோள்களை தேடுவதற்காக அனுப்பிய TESS எனப்படும் விண்வெளி தொலைநோக்கி இந்த புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளது.

நட்சத்திரங்களை கிரகங்கள் கடந்து செல்லும்போது அவற்றின் பிரகாசமானது சற்று மங்கக்கூடும் என விண்வௌி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு நட்சத்திரங்களின் பிரகாசத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து புதிய கிரகங்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் GJ357d என்ற கிரகம் உள்ளமை உலகுக்கு தெரியவந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் TESS தொலை நோக்கியில், GJ357 என்னும் நட்சத்திரத்தின் பிரகாசம் 3.9 நாட்களுக்கு ஒருமுறை சற்று குறைவது தெரியவந்தது. இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டபோது GJ357 நட்சத்திரத்தை 3 கோள்கள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 3-வதாக இருக்கும் GJ357d என்னும் கிரகம் வசிக்கத் தகுந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பூமியை விட 6.1 மடங்கு அதிக எடை கொண்ட இந்த கிரகம் 55.7 நாட்களுக்கு ஒருமுறை தனது நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

GJ357d கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், தொடர்ந்த ஆராய்ச்சிகளின் மூலமே அதனை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...