Main Menu

சுதந்திரத்தினம் குறித்த அறிவித்தல்களை வெளியிட்டார் தமிழக முதல்வர்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் உள்ள சுதந்திர போராட்டத் தியாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை கெளரவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைக் கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் முதல்வர் பழனிசாமி நாளை காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது,  மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவையாற்றிய தனிநபர், நிறுவனம்,  மருத்துவர்,  சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளையும் இதன்போது முதல்வர் வழங்கவுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “ஆண்டுதோறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள், மாணவர்கள்,  பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரோனா  தொற்றால் நிலவும் அசாதாரண சூழலை கருத்திற்கொண்டு பள்ளிக் குழந்தைகள்,  கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் யாரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

அத்துடன்  மாவட்டம்தோறும் 10 சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட  ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்றுஇ சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்க சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பகிரவும்...