Main Menu

சீன ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு ஆதாரம் உள்ளது: அமெரிக்கா

சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவியது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, வைரஸ் தொற்று பரவியதற்கு சீனாவே காரணம் என கருதுகின்றது.

இந்தநிலையில் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், ‘சீனாவின் வுஹான் நகரில் இருக்கும் ஆய்வகங்களில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதற்கு ஏராளமான முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை கூறும் கருத்தில் நான் முரண்படவில்லை. ஆனால், பல சிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் எனத் தெரிவிக்கிறார்கள். ஆதலால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

வுஹானில் இருக்கும் ஆய்வகங்கள் அனைத்தும் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இல்லாதவை, தரம் குறைந்தவை, போதுமான அளவு சுத்தம் இருக்காது. இந்தக் காரணங்களால் வைரஸ் அங்கிருந்து பரவியிருக்கலாம்’ என கூறினார்.

இதனிடையே, கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிவதற்கு வாய்ப்பில்லை என்று அமெரிக்காவின் கலிஃபோனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய் நிபுணர் ஜோன்னா மாசெட் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...