Main Menu

சீனாவில் மர்பநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் உயிரிழப்பு

சீனாவில் மர்பநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வடக்கு பகுதியில் லியோனிங் மாகாணத்திலுள்ள கையுவான் நகரில் இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பொது குளியலறைக்கு வெளியே கத்தியுடன் வந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் மெற்கொண்டுள்ளார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மக்கள் அனைவரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து வெளியேற முற்பட்டுள்ளனர்.

எனினும் அந்த மர்ம நபர் தொடர்ந்தும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபரை கைது செய்தனர்.

எனினும் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் பெயர் யாங் என்பதும் அவர் உள்ளூரை சேர்ந்தவர் என்பதும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அதேசமயம் தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரிடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...