Main Menu

சிறை மாற்றக் கோரி வழக்குத் தொடர நளினி திட்டம்

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னையும் தனது கணவன் முருகனையும் புழல் சிறைக்கு மாற்றக் கோரி வழக்குத் தாக்கல் செய்ய இருப்பதாக ராஜீவ் கொலை குற்றவாளி நளினி தனது சட்டத்தரணி புகழேந்தி மூலம் தெரிவித்தள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும் அவரது மனைவி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சமீபகாலமாக தமக்கு சிறையில் பலவித நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து நளினி மற்றும் முருகன் ஆகியோர் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் தம்மை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சிறை நிர்வாகம் அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் நளினி தமிழக தலைமை சிறைத் துறை அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தன்னையும் தனது கணவனையும் புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என கேட்டிருந்தார்.

இந்த கடிதத்திற்கும் சிறைத் துறை நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் வேலூர் மத்திய சிறையிலுள்ள முருகன் மற்றும் நளினி ஆகியோரை அவர்களது சட்டத்தரணி புகழேந்தி நேற்று (14) சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முருகன் மற்றும் நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை தமிழக சிறை துறை அதிகாரிகள் சாதகமான பதிலை வழங்கவில்லை என தெரிவித்தார்.

ஆகவே தற்போது புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளேன். பெரும்பாலும் நாளைய தினம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் நளினிக்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவு ஒவ்வாமையின் காரணமாக அவர் தற்போது வெறுமனே பழங்களை மாத்திரம் உற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...