Main Menu

கொரோனா வைரஸ் பாதிப்பு: தேர்தல் பிற்போடப்படுமா? தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் அதிகரித்துள்ளதால் நாடு எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து விவாதிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் நாட்டில் நிலவும் நிலையில் அதனை எதிர்கொள்ள சுகாதார அமைச்சுடன் இணைந்து தேர்தல் ஆணைக்குழு செயற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கூறியுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்கள் அடிப்படையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த அடுத்தகட்ட நகர்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவர் மேலும் தெரிவிக்கையில் “இணையம் மூலம் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுகின்றன. பலர் இவ்வாறான முறையினை பின்பற்றுகின்றனர். ஆனால் வீடு வீடாக சென்று பிரசாரங்கள் மேற்கொள்வதே சிறந்தது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

இருப்பினும் தற்போதைய நிலவரங்களை பொறுத்தவரை, மக்கள் இவ்வாறான குழுக்களை தங்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க விரும்புகிறார்களா என்ற சந்தேகம் எம்மத்தியில் காணப்படுகின்றது.

இருப்பினும் முதல் முறையாக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் முகங்கள் அல்லது பெயர்கள் மக்களுக்குப் பழக்கமில்லாததால், அவர்களின் பிரசாரங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் ஒரு சவாலாக இருக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

எனவே கொரோனா வைரஸ் பரவல் அடுத்த வாரமும் அதிகரித்தால் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த பின்பற்ற வேண்டிய செயன்முறைகள் தொடர்பாக நாளை விவாதிக்கவுள்ளோம்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் வைரஸ் தாக்கம் அதிகரித்தல் தேர்தல் பிற்போடப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்த பின்னர் தேர்தல் ஆணைக்குழு எடுக்க வேண்டிய ஒரு முடிவாக இது இருக்கும் என்றும், இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல்களை ஒத்திவைக்க ஒரு சரியான காரணம் இருக்க வேண்டும் என்றும் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...