Main Menu

சிரியாவில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் பலி

சிரியாவில் அரசு படைகள் நிகழ்த்திய வான்தாக்குதலில் 5 சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 10 பேர் பலியாகினர்.

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டு விட்டன. எனினும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணத்தில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்‌ஷாம் பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்க இத்லிப் மாகாணத்தில் உச்சகட்ட தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அரசு படைக்கு ஆதரவாக ர‌ஷியா மற்றும் ஈரான் நாட்டு படைகள் பயங்கரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஆனால் இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்களே அதிக அளவில் பலியாகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும் இத்லிப் மாகாணத்தில் அரசு படைகள் வான்தாக்குதல் நடத்தின. அங்குள்ள காபர் அவித் நகரில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 3 சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 7 பேர் பலியாகினர்.

அதேபோல் மாரட் அல் நுமான் நகரில் வீசப்பட்ட குண்டு, ஒரு மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் ஒரு இளம் பெண் மற்றும் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

பகிரவும்...