Main Menu

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹெமில்டன் மசகட்சா ஓய்வு!

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரர் ஹெமில்டன் மசகட்சா, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார்.

இதற்கமைய அவர், பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுடன் நடைபெறவுள்ள முத்தரப்பு ரி-20 தொடருடன் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதான ஹெமில்டன் மசகட்சா, வயது மற்றும் உடற் தகுதியை கருத்திற் கொண்டு இந்த ஓய்வு முடிவினை எடுத்துள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பின்னர். ஓய்வினை அறிவிக்கும் இரண்டாவது சிம்பாப்வே வீரர் இவராவார். இதற்கு முன்னதாக சொலமன் மைர் ஓய்வினை அறிவித்திருந்தார்.

2001ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பெற்ற ஹெமில்டன் மசகட்சா, தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அனைவரினதும் கவனத்தை ஈர்த்தார்.

அத்தோடு, இந்த சதத்தினை அடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் அறிமுக போட்டியில் இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அப்போது மசகட்சாவுக்கு 17 வயது 254 நாட்கள் ஆகும்.

இதன் பிறகு அதே ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் போட்டியிலும், 2006ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கெதிரான ரி-20 போட்டியிலம் அறிமுகமானார்.

தான் விளையாடிய காலகட்டத்தில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து, அணிக்கு பல வெற்றிகளையும் மசகட்சா, தேடி தந்துள்ளார். குறிப்பாக அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

அணியின் ஆரம்ப மற்றும் நடுத்தர வரிசையில் களமிறங்கி துடுப்பெடுத்தாடக் கூடிய இவர், சிறந்த மித வேக பந்துவீச்சாளரும் ஆவார்.

இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மசகட்சா, 5 சதங்கள், 8 அரைசதங்கள் அடங்களாக 2222 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 158 ஆகும். சராசரி 30.03 ஆகும்.

209 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மசகட்சா, 5 சதங்கள், 34 அரைசதங்கள் அடங்களாக 5658 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 178 ஆகும். சராசரி 27.74 ஆகும்.

2009ஆம் ஆண்டு கென்யா அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில், மசகட்சா 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

61 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ள மசகட்சா, 9 அரைசதங்கள் அடங்களாக 1467 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 93 ஆகும். சராசரி 24.86 ஆகும்.

பகிரவும்...