Main Menu

சிங்கப்பூர் விமானத்தில் “தமிழில்” அறிவிப்பு.. பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பைலட்

ஸ்கூட்(Scoot) நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான குறைந்த கட்டணங்களை கொண்ட விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவன விமானம் ஒன்று கடந்த வாரம் தமிழக தலைநகர் சென்னையிலிருந்து, சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது அதிலிருந்த தமிழ் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடீரெனெ எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம், விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கும் நேரம், மற்றும் தற்போதைய வானிலை குறித்த தகவல்கள் தமிழில் ஒலித்தது. இதனை கேட்ட விமானத்தில் இருந்த தமிழ் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

நாடு வானில் திடீரென ஸ்கூட் விமானத்தில் கேட்ட அந்த தமிழ் அறிவிப்பு பின்வருமாறு, ” வணக்கம், நான் உங்கள் விமானி சரவணன் அய்யாவு பேசுகிறேன். தற்போது நாம் 41,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் சிங்கப்பூரில் விமானத்தை தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் துவங்க உள்ளது. சிங்கப்பூர் நேரப்படி 7.40-க்கு அங்கு தரையிறங்குவோம்.

சிங்கப்பூர் நேரத்தோடு ஒப்பிடும்போது சென்னை 2.30 மணி நேரம் பின்னால் உள்ளது. சிங்கப்பூரில் வானிலை மேகமூட்டமாக உள்ளது. அங்கு தற்போதைய வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியஸ் ” என்று பேசிக்கொண்டே மேற்கூறியவற்றை அழகாக ஆங்கிலத்திலும் அப்படியே சொல்கிறார் விமானி சரவணன் அய்யாவு.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்கூட் நிறுவனம், விமானம் தரை இறங்கும் முன்னர் வழங்க வேண்டிய அறிவிப்பை 4 மொழிகளில் முன்கூட்டியே ஒலிப்பதிவு செய்து அறிவிப்பது கடினம். இதனிடையே விமானி சரவணன் அய்யாவு நல்ல தமிழ் படைப்பாளி. எனவே அவரது கோரிக்கையை ஏற்று தமிழில் அறிவிப்பு அளிக்க அனுமதி அளித்தோம். அதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...