Main Menu

சமஷ்டி அடிப்படையில் பேச்சுக்கு தயார் என ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் – கஜேந்திரகுமார் நிபந்தனை

அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை சமஷ்டி அடிப்படையில் முன்னெடுப்பதற்கு தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

குறித்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் அவருடன் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு தயராக உள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

வடக்கு தமிழ் எம்.பிக்களுடன் அதிகாரப்பகிர்வு, அபிவிருத்தி உள்ளிட்ட வடக்கு மக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் 11ஆம் திகதி முதல் பேச்சு நடத்த ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு குறித்த தொடர் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற தனது முடிவை பௌத்த தேரர்கள் போராட்டத்தினை அடுத்து ஜனாதிபதி மாற்றிக்கொண்டார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியை உடைய நபரின் அழைப்பினை ஏற்று எவ்வாறு தாம் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார். (நன்றி கேசரி)

பகிரவும்...